கொரோனா வைரஸ் பீதியால் சொந்த ஊருக்கு படையெடுத்த வெளிமாநில தொழிலாளர்கள் புனே ரெயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு

கொரோனா வைரஸ் பீதியால் சொந்த மாநிலத்திற்கு செல்ல வெளிமாநில தொழிலாளிகள் புனே ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-20 23:13 GMT
புனே, 

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மராட்டியத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக மும்பை உள்பட புனே, நாக்பூர், பிம்பிரி-சிஞ்ச்வாட் போன்ற இடங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி உள்ளது.

இதனால் மாநில அரசு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை இழுத்து மூட வலியுறுத்தியது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மளிகை பொருட்கள், மருந்துக்கடைகள், வங்கிகள் போன்றவற்றை திறந்து வைக்க உத்தரவிட்டது.

புனே ரெயில் நிலையம்

இருப்பினும் புனே, பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்ததால் பஸ் போக்குவரத்து மற்றும் புனே, நாக்பூர் இடையே ரெயில் போக்குவரத்து வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதனால் புனேயில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் தினந்தோறும் வேலை பார்த்து வருமானம் பார்க்கும் தொழிலாளிகள் மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகினர். இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று புனே ரெயில் நிலையத்திற்கு படையெடுத்தனர். இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளிகள் ஆவர்.

செலவிற்கு கூட பணம் இல்லை

இதுபற்றி உத்தரபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில், அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டதால் கூலி தொழிலாளிகளான எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கைசெலவுக்கு கூட பணம் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளோம். தற்போது ரெயில் டிக்கெட் கிடைக்காமல் ரெயில் நிலையத்தில் காத்து கிடக்கிறோம் என கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் தங்கி இருக்கும்படி மாநில அரசு வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது சொந்த மாநிலத்திற்கு செல்ல வெளிமாநில தொழிலாளிகள் புனே ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்