கேரள எல்லையையொட்டி உள்ள ஒன்பதாறு சோதனை சாவடி இன்று முதல் மூடப்படுகிறது - திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரள எல்லையையொட்டி உள்ள ஒன்பதாறு சோதனை சாவடி இன்று(சனிக்கிழமை) முதல் மூடப்படுகிறதுஎன்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2020-03-20 20:30 GMT
திருப்பூர், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் செயல்படும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 அடுக்குடன் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி 14 நாட்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரள மாநில எல்லையான உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட ஒன்பதாறு சோதனை சாவடியில் கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். கேரளாவில் இருந்து வரும் அரசு பஸ்கள், சுற்றுலா பஸ்கள், கார், சரக்கு வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட பிறகே திருப்பூர் மாவட்டத்துக்குள் இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஒன்பதாறு சோதனை சாவடி இன்று(சனிக்கிழமை) முதல் மூடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கும் இடையேயான பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகன தொடர்பும் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த பணியை வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டு பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார். மருத்துவ அதிகாரிகள், ஆம்புலன்சு டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்