தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்

ஊரக பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார்.

Update: 2020-03-20 22:30 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார்.

வாக்குச்சாவடி பட்டியல் 

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடத்திட ஏதுவாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று வெளியிட்டார்.

பின்னர் இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் 282 வாக்குச்சாவடிகள், 18 பேரூராட்சிகளில் 299 வாக்குச்சாவடிகள், 10 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 1,287 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் 145, பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் 145 மற்றும் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் 1,578 என மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

புகார்கள் 


வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களின் நகல் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் பார்வையிடுவதற்கு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் அதன் நகல் பெற்று கொள்ளலாம்.

இதுகுறித்த புகார்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசிப்பதற்கான கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் பின்னர் வெளியிடப்படும் திருந்திய கால அட்டவணைப்படி நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்