திசையன்விளையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது

திசையன்விளையிலுள்ள நகைக்கடையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 பவுன் நகையை திருடி சென்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-20 22:45 GMT
திசையன்விளை, 

திசையன்விளையிலுள்ள நகைக்கடையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 பவுன் நகையை திருடி சென்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

நகை திருட்டு 

நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின்பஜாரில் கைக்கடை நடத்தி வருபவர் கணேசன்(வயது55). இவரது கடைக்கு, கடந்த 2012–ம் ஆண்டு 2 பெண்கள் வந்தனர். நகை வாங்குவது போல நடித்து விட்டு கடையில் இருந்த 2 பவுன் நகையை திருடிக் கொண்டு நழுவிச் சென்று விட்டனர். அந்த 2 பேரும் கடையில் நகையை திருடி காட்சி, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக கணேசன் கொடுத்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மற்றொரு கடையில்... 

இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி அதே பஜாரில் திருவடிமுத்து என்பவரது நகைக்கடையில் ஒரு ஆணும், 2 பெண்களும் சேர்ந்து நகை வாங்குவது போல நடித்து 4 பவுன் நகைகளை திருடி சென்றனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, அந்த நகைத்திருட்டில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகரை சேர்ந்த சந்தானம் மனைவி லட்சுமி(60), சக்திவேல் நகரை சேர்ந்த கருப்பசாமி(46), அவரது மனைவி பாண்டீஸ்வரி(41) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் 2012–ம் ஆண்டு கணேசன் நகைக்கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த கடையில் நகையை திருடி சென்றது லட்சுமியும், பாண்டீஸ்வரியும் என உறுதி செய்தனர்.

சிறையில் அடைப்பு 

இதை தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் சிறையிலிருந்து அந்த 2 பேரையும் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் கடையில் 2 பவுன் நகை திருடியதை அந்த 2 பெண்களும் ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 2 பவுன் நகை மீட்கப்பட்டது. இந்த வழக்கில் லட்சுமி, பாண்டீஸ்வரியை திசையன்விளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு நெல்லை கொக்கிரகுளத்திலுள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்