வத்திராயிருப்பு பகுதியில் தண்டோரா போட்டு கொரோனா விழிப்புணர்வு
கொரோனா குறித்து தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வத்திராயிருப்பு,
கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை மாவட்டத்தின் பல இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளில் முழுமையான தூய்மைப்பணி, கைகளை சுத்தம் செய்யும் முறை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
வத்திராயிருப்பில் நடந்த நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் சிந்துமுருகன், மண்டல அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பஸ் நிலைய பகுதிகளில் பணி நடந்து வருகிறது.பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
காரியாபட்டி அருகே டி.வேப்பங்குளம் ஊராட்சி ஏ. தொட்டியங்குளம் கிராமத்தில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வையும், தினமும் கைகழுவ வேண்டும் என்பது பற்றியும் பள்ளி குழந்தைகளுக்கும், கிராம பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மற்றும் தண்டோரா மூலமும் டி.வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிஈஸ்வரன் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஊராட்சி செயலர் ஆடியராஜன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி யூனியன் அலுவலகத்தில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விவேகன்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி வட்டார சுகாதார அலுவலர் வைரகுமார், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன், சுகாதார அதிகாரி வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நோய் பரவலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கி பேசினர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி நன்றி கூறினார்.
சிவகாசி சிவன் கோவிலில் நேற்று மதியம் அன்னதான திட்டத்தின் கீழ் சாப்பிட வந்த 110 பேருக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு அவர்கள் கைகழுவிய பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பீதி காரணமாக சிவகாசி சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் அரசு உத்தரவை மீறி இயங்குகிறதா? என்பது குறித்து தாசில்தார் வெங்கடேசன் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். டாஸ்மாக் கடைகளுடன் செயல்பட்டு வந்த பார்களுக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பார்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் கண்காணித்த னர்.சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட தேவர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை தலைமையில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் பலர் இதில் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர். பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை வழங்கினார்.
ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. நகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பற்றி விளக்கி பேசினார்.
முகாமில் ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ் மற்றும் தாசில்தார்கள் ரெங்கசாமி, முத்துலட்சுமி, சரஸ்வதி, துணை தாசில்தார்கள் பாலகிருஷ்ணன், விஜிமாரி, அருளாநந்தம், வருவாய் ஆய்வாளர்கள் அழகராஜ், முத்துராமலிங்கம், வேல்பிரியா, கற்பகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையாளர் அயூப்கான், நகர் நல அலுவலர் இந்திரா ஏற்பாட்டின் பேரில் ஆய்வாளர் ராஜபாண்டி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். டிரைவர்களுக்கு கைகழுவும் முறை குறித்து விளக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.