வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருப்பத்தூரில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, கடை வாடகை ஆகியவற்றை பொதுமக்கள் செலுத்தாமல் அதிகளவில் பாக்கி வைத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் செய்ய முடியாமல் உள்ளது. இந்த நிலையில் வரிகளை வசூலிக்க அனைத்து நிலை அலுவலர்களும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சுதா தலைமையில், நகராட்சி பணியாளர்கள் வரி வசூலிக்க தண்டோரா போட்டும், வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டும், நகராட்சி அலுவலர்கள் நேரில் சென்றும் வசூல் பணியில் ஈடுபட்டனர். வரி நிலுவை வைத்துள்ளவர்கள் உடனடியாக வரிகளைச் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
அப்போது அதிக வரி பாக்கி வைத்துள்ள திருமண மண்டபங்கள், கார் பார்க்கிங், ஷாப்பிங் மால் ஆகியவற்றுக்கு நகராட்சி சார்பில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாத பொதுமக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நகராட்சி பகுதியில் மக்கள் பணியை சிறப்பாக செய்ய பொதுமக்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரியை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி நகராட்சி நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இருப்பினும் திருப்பத்தூர் காமராஜ் நகர் ரோடு, அபாய்தெரு, ஜார்ஜ் பேட்டை போன்ற பகுதிகளில் வரி பாக்கி மற்றும் குடிநீர் பாக்கி வைத்து இருந்த வீடுகளில் நகராட்சி ஆணையாளர் சுதா, உதவி பொறியாளர் தங்கராஜ், பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் நேரடியாக சென்று குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.