கொரோனா அச்சுறுத்தல்: தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து பாதிப்பு

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-03-19 22:00 GMT
தூத்துக்குடி, 

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் உள்ள மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. மாலுமிகள் யாரும் தரையில் இறங்க அனுமதிக்கப்படுவது இல்லை.

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து கப்பல்கள் வரத்து முற்றிலும் குறைந்து உள்ளது. வெளிநாடுகளில் இருந்து சமீபகாலமாக மரத்தடி இறக்குமதியும் குறைந்து விட்டது. எந்திர தளவாடங்கள் இறக்குமதியும், ஜவுளி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் நிலக்கரி இறக்குமதியில் எந்தவித பாதிப்பும் இல்லை. இதனால் சுமார் 40 சதவீதம் வரை சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகாரி

இதுகுறித்து வ.உ.சி. துறைமுக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தூத்துக்குடி துறைமுகத்துக்கு பெரும்பாலும் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கப்பல்கள் வருவது இல்லை. பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து தான் நிலக்கரி உள்ளிட்டவை அதிக அளவில் வருகின்றன. அதேபோன்று சரக்கு பெட்டகங்களும் அதிக அளவில் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கப்பல் வரத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் மரத்தடி, எந்திர தளவாடங்கள் இறக்குமதி குறைந்து உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்