கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2020-03-19 22:30 GMT
பெரம்பலூர், 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பெரிதும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கலெக்டர் சாந்தா தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 38 பேர் சுகாதாரப்பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை அழைத்து வருவதற்கு பிரத்யேக வசதியுடன் கூடிய ஆம்புலன்சு தயார் நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டத்தில் உள்ள கோவில்கள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், வங்கிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு செல்வதற்கு முன், கைகளை சோப்பு அல்லது சோப்பு திரவத்தை பயன் படுத்தி தண்ணீரில் கை கழுவி விட்டு வர வேண்டும் என்று கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார். இதற்காக கலெக்டர் அலுவலகத்தின் முகப்பில் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கை கழுவுவதற்கு சோப்பு, சோப்பு திரவம் மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அதில் அதிகாரிகள், ஊழியர்கள் கைகளை நன்கு கழுவி சென்றனர். மேலும் பெரம்பலூர் நகராட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தின் 2 தளங்களில் உள்ள அறைகளிலும், படிக்கட்டு கைப்பிடிகளிலும் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் துப்புரவு பணியாளர்கள் தெளித்தனர். மேலும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரப்பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர். மேலும் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூருக்குள் நுழையும் அரசு பஸ், தனியார் பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து புறப்படும் அரசு பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக காலை, மாலை ஆகிய 2 வேளையிலும் சுக்கு, மிளகு காபியும், மதியம் பூண்டு ரசம் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி விளக்கமளித்து பேசினார். அப்போது அவர் கை கழுவும் முறைகளை செய்து காண்பித்து விளக்கமளித்தார். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆலத்தூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், துணை தாசில்தார் முத்துமுருகன், செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பஞ்சாபிகேஷன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 33 ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் முறைகள், அதன் தீவிரம், அதனை தடுக்க ஊராட்சி மன்ற நிர்வாகம் செய்ய வேண்டிய தடுப்பு முறைகள், பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, தமிழ்ஒலி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், அணைக்குடம் ஊராட்சியில் மக்கள் கூடும் இடங்களில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில், மக்கள் தொடர்பு துறை சார்பில் பிரசார வாகனத்தில் காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா தலைமை தாங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்