தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு பஸ், ரெயில் நிலையங்களில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பு
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். பஸ், ரெயில் நிலையங்களில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் 100 பேருக்கு அதிகமாக மக்கள் வரக்கூடிய கடைகள் அனைத்தையும் மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான ஜவுளிக்கடைகள் மூடப்பட்டன. இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. பஸ்களிலும் மக்கள் குறைந்த அளவே பயணம் செய்து வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
மேலும் பஸ்நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்கள், வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு வெளியில் கைகழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலையில் திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
காய்ச்சல் பரிசோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்–அமைச்சரின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் வருகிற 31–ந் தேதி வரை மூடப்பட்டு உள்ளன. இதேபோன்று விளையாட்டு மைதானம், பூங்காக்களும் மூடப்பட்டு இருக்கின்றன. பஸ்கள், ஷேர் ஆட்டோ, ஆட்டோக்களில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் கை கழுவுவதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்துக்கு வரும் மக்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக அவருடைய விவரம் சேகரித்து உரிய கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள்.
48 பேர் கண்காணிப்பு
இதுவரை வெளிநாடுகளுக்கு சென்று வந்த, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 48 பேர் வீடுகளில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த அறிகுறிகளும் இல்லை. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) 2 பேர் காய்ச்சலுடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மற்றொருவரும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வேறு யாரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பலர் சந்தேகத்தின் பேரில் ஆஸ்பத்திரிக்கு வந்து ஆலோசனை பெற்று செல்கின்றனர்.
கட்டுப்பாட்டு அறை
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு டாக்டர் எப்போதும் பணியில் இருக்கிறார். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு, உற்பத்தியை தொடங்கி உள்ளனர்.
மாவட்டத்தில் 100–க்கும் அதிகமாக மக்கள் வரக்கூடிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதனை மீறி கடையை திறந்தால், கடையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் மட்டும்தான் திறந்து இருக்கும். அதனை மீறி பள்ளிக்கூடங்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசு திணிப்பது அல்ல. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை. மக்கள் சுத்தமாக இருந்து, இந்த நோய் பரவாமல் தடுக்க வேண்டும். தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கும் முன்பும், முடிந்த பிறகும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.