கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை இடைவெளி விட்டு அமர்ந்து பயணம் செய்ய பஸ், ரெயில்களில் இருக்கைகள் பாதியாக குறைப்பு மராட்டிய அரசு அதிரடி
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இடைவெளி விட்டு பயணம் செய்யும் வகையில் பஸ், ரெயில்களில் இருக்கைகள் பாதியாக குறைக்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
மும்பை,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் நேற்று வரை 7 ஆயிரத்து 900 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் 3 பேர் பலி
இந்தியாவில் மும்பையை சேர்ந்த முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்ததாக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டது. தேவையின்றி பயணம் செய்தால் மும்பையில் மின்சார ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்-மந்திரி ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா தடுப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மராட்டியத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்சார ரெயில்கள் மற்றும் பஸ்களை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பயணிகள் இடைவெளி விட்டு இருக்கையில் அமர்ந்து பயணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என நம்புகிறோம். இதனால் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளோம்.
பெஸ்ட் பஸ்களில் எத்தனை இருக்கை உள்ளதோ, அத்தனை இருக்கைக்கான பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் நின்று செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கடைகள் திறப்பு நேரம்
மற்றொரு நடவடிக்கையாக கடைகள் திறந்து இருக்கும் நேரம் பற்றி முடிவு செய்யப்படும். அத்தியாவசிய பொருட்களை யாரும் பதுக்கி வைக்க வேண்டாம்.
கொரோனா அறிகுறி முத்திரை குத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் பொது இடங்களில் திரிந்தால், வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும். அதன்படி முதல்நாள் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மறுநாள் பணிக்கு வரமாட்டார்கள். இவ்வாறு சுழற்சி அடிப்படையில் அவர்கள் அலுவலகம் வந்து பணியாற்றுவார்கள்.
இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.