கொரோனா தடுப்பு நடவடிக்கை முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் கர்நாடக மந்திரிசபையின் அவசர கூட்டம் தியேட்டர்கள், வணிகவளாகங்களை 31-ந் தேதி வரை மூட உத்தரவு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தியேட்டர்கள்-வணிக வளாகங்களை வருகிற 31-ந் தேதி வரை மூடுவது என்று முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த கர்நாடக மந்திரிசபையின் அவசர கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-03-18 23:44 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா ைவரசுக்கு ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

மந்திரிசபை அவசர கூட்டம்

மேலும் 13 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரித்து வருகிறது. இந்த நிைலயில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து விவாதிக்க கர்நாடக மந்திரிசபையின் அவசர கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கர்நாடக சட்டசபை கூட்டத்தில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 150 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை உலக சுகாதார நிறுவனம், பெருந்தொற்று (பேன்டமிக்) என்று அறிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் பரவாமல் தடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 2 மாதங்களுக்கு முன்பே முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

ரூ.200 கோடி ஒதுக்கீடு

இதற்கு நிதி பற்றாக்குறை இல்லை என்றும், எவ்வளவு நிதி வேண்டுமானாலும் ஒதுக்க தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி கூறினார். கடந்த 2 மாதங்களாக சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். அந்த வைரஸ் அறிகுறி உள்ளவர்களை ஏ, பி, சி என்று பிரித்து அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபையின் அவசர கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் இன்று (நேற்று) நடைபெற்றது. இதில் கொரோனா வைரசை கர்நாடகத்தில் மேலும் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மந்திரிகள் தங்களின் ஆலோசனைகளை தெரிவித்தனர். இந்த வைரசை கட்டுப்படுத்த முதல்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இனி வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரையும் 15 நாட்கள் கட்டாயம் தனிமையில் வைத்து கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயப்பட தேவை இல்லை

அதன்படி விமான நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், ரெசார்ட்டுகள், கல்லூரி கட்டிடங்களில் அவர்களை தங்கவைக்க முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் கடந்த வாரம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டன. திருமணம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வந்தவுடன் சாவு உறுதி என்று யாரும் பயப்பட தேவை இல்லை. இதற்கு முன்பு சார்ஸ் போன்ற வைரசால் ஏற்பட்ட மரணங்களை விட இந்த வைரசுக்கு ஏற்பட்டுள்ள மரணங்கள் குறைவு தான். சீனாவில் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 3.5 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இது மிக குறைவு தான். அதனால் கொரோனாவை கண்டு நாம் பயப்பட தேவை இல்லை. ஆனால் இந்த வைரஸ் பரவும் வேகம் தான் அதிகமாக உள்ளது.

பரிசோதனை திறன்

நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வகங்கள் 54 தான் உள்ளது. இதில் கர்நாடகத்தில் 5 ஆய்வகங்கள் இருக்கிறது. மேலும் நமது மாநிலத்தில் உப்பள்ளி, மங்களூரு உள்ளிட்ட இ்டங்களிலும் ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இத்தகைய ஆய்வகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நமது நாட்டில் ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரில் 10 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யும் திறன் உள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இது மிக குறைவு.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரையும் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை. அறிகுறி உள்ளவர்களுக்கு ஆய்வக பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்த 14 பேரில் 11 பேர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள். மற்ற 3 பேர், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள். கர்நாடகத்தில் இனி இந்த வைரஸ் பரவக்கூடாது. அதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கூட்டமாக சேரக்கூடாது

சட்டங்கள் மூலம் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முடியாது. மக்களிடைேய அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக சேரக்கூடாது. கர்நாடக அரசு எடுத்துள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பிரபல பத்திரிகையாளர் என்.ராம் பாராட்டியுள்ளார். இந்த விஷயத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுகின்றன. எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் தங்களின் தொகுதிகளில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை செய்ய வேண்டும்.

அடுத்த 3 வாரங்கள் நமக்கு மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் நாம் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திவிட்டால், நாம் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். கடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து கர்நாடகத்திற்கு 42 ஆயிரத்து 500 பேர் வந்துள்ளனர். அவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் வெளியே சென்றால், அது அவர்களின் செல்போன் மூலம் தெரிந்துவிடும். அதையும் நாங்கள் கண்காணிக்கிறோம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

முன்னதாக கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் கொரோனா வைரஸ் குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினை கிளப்பி பேசினர். அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை மந்திரி, கொரோனா வைரசை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகள்