பெங்களூருவில், அரசு அதிகாரிகளின் முத்திரைகளை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுமனைகள் விற்ற வாலிபர் கைது
பெங்களூருவில், அரசு அதிகாரிகளின் முத்திரைகளை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுமனைகள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
பெங்களூரு பசவேசுவராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குருபரஹள்ளி கர்நாடக லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரூபலட்சுமி. இவர், அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கர்நாடக லே-அவுட்டில் அவருக்கு சொந்தமான வீட்டுமனையை சமீபத்தில் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்திருந்தனர். இதுதொடர்பாக பசவேசுவராநகர் போலீசில் ரூபலட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க பசவேசுவராநகர் போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள்.
இந்த நிலையில், போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூபலட்சுமிக்கு சொந்தமான வீட்டுமனையை விற்றிருந்த லக்கரே அருகே கெம்பேகவுடா லே-அவுட்டை சேர்ந்த வினய்குமார்(வயது 30) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
போலி ஆவணங்கள் தயாரித்து...
பசவேசுவராநகர் போலீஸ் நிலையத்தில் ரூபலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான வீட்டுமனையை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்திருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான வினய்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல அதிர்ச்சி தரும் முக்கிய தகவல்கள் வெளியே வந்தது. அதாவது ரூபலட்சுமி மட்டுமின்றி, பெங்களூரு நைஸ் ரோடு அருகே லட்சுமிபுரா கிராமத்தில் தரித்ரா லே-அவுட்டில் உள்ள 9 வீட்டுமனைகளையும் போலி ஆவணங்கள் தயாரித்து வினய் குமார் விற்றது தெரிந்தது.
ரூபலட்சுமிக்கு சொந்தமான வீட்டுமனையை போலி ஆவணங்கள் தயாரித்து சிவம்மா என்பவர் பெயருக்கு வினய் குமார் உள்ளிட்டோர் மாற்றியுள்ளனர். பின்னர் அந்த வீட்டுமனையை ராஜ் சந்திரசேகருக்கு விற்பனை செய்திருந்தனர். இதற்காக சிவம்மாவுக்கு பணம் கொடுத்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்று தன்னுடைய வீட்டுமனை தான் என்று அதிகாரிகளிடம் கூறும்படி தெரிவித்திருந்தனர். இவ்வாறு பொதுமக்கள் பெயரில் உள்ள வீட்டு மனைகளை தங்களுக்கு தெரிந்தவர்கள் பெயரில் மாற்றுவதற்காக சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பயன்படுத்தும் போலி முத்திரைகளை வினய்குமார் தயாரித்திருக்கிறார்.
இறப்பு சான்றிதழ்கள்
அந்த முத்திரைகளை பயன்படுத்தி ரூபலட்சுமிக்கு சொந்தமான வீட்டுமனை உள்பட 10 வீட்டுமனைகளை தங்களுக்கு தெரிந்தவர்களின் பெயருக்கு மாற்றியுள்ளனர். வீட்டுமனைகளை விற்க முடியாத பட்சத்தில், அந்த வீட்டுமனைகளின் பெயரில் உள்ள போலி பத்திரங்களை வங்கியில் கொடுத்து பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியும் வினய்குமார் மோசடி செய்திருந்தார். இதுதவிர பல்வேறு போலி சான்றிதழ்களை தயாரித்தும் வினய்குமார் கொடுத்துள்ளார்.
குறிப்பாக அரசு அதிகாரிகளின் போலி முத்திரைகளை பயன்படுத்தி ஏராளமானவர்களுக்கு இறப்பு சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து வந்துள்ளார். சிலருக்கு வேலை வாய்ப்புக்கான போலி சான்றிதழ்களையும் வினய்குமார் தயாரித்து கொடுத்திருக்கிறார். வினய் குமாரிடம் இருந்து பல்வேறு வீட்டுமனைகளின் போலி ஆவணங்கள், சார் பதிவாளர், மாநகராட்சி, வருவாய்த்துறை உள்பட 70-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
3 பேர் தலைமறைவு
வினய்குமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது வருவாய்த்துறைக்கு சொந்தமான பழைய ஆவணங்களும் சிக்கின. அந்த ஆவணங்கள் மூலம் பெங்களூருவில் காலியாக இருக்கும் நிலங்களை கண்டறிந்து அவற்றுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்க அவர் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வினய்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் வினய்குமாருக்கு பின்னால் சில முக்கிய நபர்கள் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலி ஆவணங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட வீட்டுமனைகளை யாரெல்லாம் வாங்கினார்கள்? என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விஸ்வநாத் உள்ளிட்ட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் கூறினார்.