கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

Update: 2020-03-17 23:00 GMT
சிவகங்கை,

தற்போது உலக நாடுகளை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோயை பேரிடராக அறிவித்து தற்போது அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகளின் மூலம் பொது சுகாதாரத்துறையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை கடைபிடித்து சுகாதாரத்தை முழுமையாக பாதுகாக்க வேண்டும்.

காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதேபோல் அக்கம்பக்கத்தில் யாருக்கேனும் இந்த அறிகுறி இருந்தாலும் அவர்களுக்கு அறிவுரை வழங்கி மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்த வேண்டும்.

கிருமி நாசினி மருந்து

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருசிலரிடம் இருப்பதாக அறியவருகிறது. ஆகவே அதுபோன்ற நபா்களைக் கண்டறிந்து மருத்துவத்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் வெளியில் சென்று விட்டு வந்தால் தவறாமல் ஒவ்வொரு முறையும் கைகளை கழுவ வேண்டும்.

மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அரசு பஸ்களில் தினசரி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தனியார் பஸ்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்