புதுச்சேரியில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை கலெக்டர் அருண் உத்தரவு

புதுவையில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் கூறினார்.

Update: 2020-03-14 23:49 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அருண் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துணை கலெக்டர் சஷ்வத் சவுரப், பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு, நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சிவக்குமார் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கலெக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவரம் சேகரிப்பு

புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்கள் நடந்து வருகின்றன.

புதுவைக்கு வருபவர்கள் எல்லையிலேயே பரிசோதிக்கப்படுகின்றனர். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பன போன்ற விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதேபோல் ஓட்டல்களில் தங்குபவர்களிடமும் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

சினிமா தியேட்டர்கள்

அத்தகையவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க ஓட்டல் நிர்வாகிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சினிமா தியேட்டர்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அங்கன்வாடி ஊழியர்களும் வீடுவீடாக சென்று கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை? குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டங்களுக்கு தடை

அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 10 படுக்கைகளுடன் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக பஸ்களை சுத்தமாக வைத்திருக்க கூறியுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு குறித்த விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள் சார்பிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே கொடுத்த உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் இதுவரை நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இருந்தபோதிலும் நாம் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

அதிக விலைக்கு விற்றால்...

முகக்கவசம், கிருமி நாசினிகளை அதிகவிலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றை பதுக்கி வைப்பதும் சட்டப்படி குற்றமாகும். கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சந்தேகப்படும்படியானவர்களை சோதனை செய்வார்கள்.

இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.

மேலும் செய்திகள்