மின்சாரம் பாய்ந்து கருகியதால் அகற்றம்: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் கைகளை மீண்டும் பெற்ற வாலிபர் முதல்-அமைச்சரை, குடும்பத்துடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்

மின்சாரம் பாய்ந்து கருகியதால் அகற்றப்பட்ட கைகளை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் மீண்டும் பெற்ற வாலிபர் தனது குடும்பத்துடன் வந்து, முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Update: 2020-03-14 22:51 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள போடிகாமன்வாடியை சேர்ந்த ராமசாமி மகன் நாராயணசாமி (வயது 33). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள, இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவர், கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந்தேதி, சித்தையன்கோட்டைக்கு கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு கட்டிட பணிக்காக சாரம் அமைத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், அவருடைய 2 கைகளும் கருகின. இதையடுத்து மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், 2 கைகளும் முற்றிலும் சேதமாகி இருந்ததால் அவை அகற்றப்பட்டன. பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் பெற்றோருடன் சிரமப்பட்டார். எனவே, உதவித்தொகை கேட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் கலெக்டராக இருந்த வினயிடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து அவருக்கு மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை, பசுமை வீடு திட்டத்தில் ஒரு வீடு வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்தார். இதுபற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில், அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இறந்த ஒருவரின் உடலில் இருந்து கைகளை எடுத்து, நாராயணசாமிக்கு பொருத்தப்பட்டு பூரண குணமடைந்தார். மேலும் அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணிக்கான நியமன ஆணையையும், முதல்-அமைச்சர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு திருமணமாகி, தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நாராயணசாமி தனது மனைவி, குழந்தையுடன் வந்து சந்தித்து நன்றி கூறினார். அப்போது முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் காலில் விழுந்து நன்றி பெருக்கோடு வணங்கினார். உடனே நாராயணசாமியின் குழந்தையை, முதல்-அமைச்சர் பழனிசாமி வாங்கி கொஞ்சினார். இந்த சம்பவத்தினால், விழா மேடையில் இருந்தவர்கள் உள்பட அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்