‘பெண் குழந்தைகள் சுமை அல்ல பொக்கி‌‌ஷம்’ மகளிர் தின விழாவில் கலெக்டர் அன்புசெல்வன் பேச்சு

பெண் குழந்தைகள் சுமை அல்ல பொக்கி‌‌ஷம் என்று கடலூரில் நடந்த மகளிர் தினவிழாவில் கலெக்டர் அன்புசெல்வன் பேசினார்.

Update: 2020-03-14 22:30 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உலக மகளிர் தின விழா கடலூர் மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அன்பழகி வரவேற்றார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசியதாவது:-

பெண்கள் நினைத்தால் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும். அதனால்தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தாய், மனைவி, சகோதரி, தோழி, பாட்டி என பல்வேறு நிலையில் இருந்து மனித குலத்துக்கே அன்பையும், பாசத்தையும் புகட்டும் ஒரே இனம் பெண்கள்தான்.

உடல் ரீதியாக ஆண்கள் வலிமையானவர்களாக இருக்கலாம் ஆனால் மன ரீதியாக வலிமை பெற்றவர்கள் பெண்கள். ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால், சமூகமே கல்வி அறிவு பெறுகிறது. பெண்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெண் குழந்தை பெற்றால் சிலர் சுமையாக கருதுகிறார்கள். பெண் குழந்தைகள் சுமை அல்ல பொக்கி‌‌ஷம். பெண் குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும். இன்று பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. எனவே பெண்குழந்தை பிறப்பை தவிர்க்க கூடாது. அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும்.

நமது உடலும், உள்ளமும் சுத்தமாக இருந்தால் நோய் வருவதை தவிர்க்கலாம். கடலூர் மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் நோய் பாதிப்பு இல்லை. வரக்கூடாது, வராது. அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைதான் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு பரிசு மற்றும் உதவி தொகைகளை கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார். பின்னர் பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக சுகாதாரத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டார்.

விழாவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மகளிர் நல அலுவலர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்