மின்சார ரெயில் பயணிகளிடம் திருடிய பாட்டி-பேத்தி கைது 30 ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல்

மின்சார ரெயில் பயணிகளிடம் திருடிய பாட்டி பேத்தி உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 ஏ.டி.எம். கார்டுகள், பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-03-14 22:30 GMT
தாம்பரம், 

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கான மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. மின்சார ரெயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் இதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இதனால் மின்சார ரெயில்களில் எப்பொழுதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் பயணிகளின் பர்ஸ், செல்போன், நகை உள்ளிட்டவைகளை திருடி சென்று விடுகின்றனர். தற்போது இது போன்ற சம்பவங்கள் ஓடும் மின்சார ரெயில்களில் அதிக அளவில் நடைபெறுவதால், ரெயில்களில் தனிப்படை போலீசார் தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என சென்னை ரெயில்வே சூப்பிரண்டு மகேஷ்வரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் தாம்பரம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பத்மபிரியா மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் சரளா தலைமையில் தனிப்படை போலீசார் மின்சார ரெயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ரெயிலில் மடக்கிப்பிடித்த போலீசார்

இந்தநிலையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் சரளா தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, பெண்கள் பெட்டியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூற, போலீசார் அவரது பையை சோதனை செய்தனர். அதில் 10-க்கும் மேற்பட்ட ‘மணிப்பர்ஸ்’கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண் மதுரை மாவட்டம் அரசரடி பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவரின் மனைவி ஸ்டெல்லா(வயது 31) என்பது தெரியவந்தது.

பாட்டி மற்றும் பேத்தி கைது

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்டெல்லா, வண்டலூரில் தனியாக வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தங்கியிருந்ததும், மின்சார ரெயில்களில் பயணிகளிடம் இருந்து திருடிய பொருட்களை அந்த வீட்டில் பதுக்கி வைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் மின்சார ரெயிலில் பயணிகளிடம் பெண்கள் பெட்டியில் கைவரிசை காட்டிய ஆந்திரா மாநிலம் பாவுகடா பகுதியை சேர்ந்த சுசீலா(61) மற்றும் அவருடைய பேத்தி ரேகா(21) என்பவரை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பயணிகள் போல் மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளின் செல்போன், பணம் உள்ளிட்டவை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 பெண்களிடம் இருந்து 30 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்