பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது துணைவேந்தர் மணிசங்கர் பேச்சு

பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது என்று துணைவேந்தர் மணிசங்கர் கூறினார்.

Update: 2020-03-13 23:36 GMT
திருச்சி,

21-ம் நூற்றாண்டில் துறைதோறும் பெண்களின் சாதனைகளும்-வாய்ப்புகளும் மற்றும் பாலின இடைவெளி களைவதற்கான உத்திகளும், சவால்களும் என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கு நிறைவுவிழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது. விழாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:-

பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ளார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து பட்டம் அளித்ததில் உலக அளவில் சாதனை புரிந்து வருகிறது. பட்டம் பெற்றவர்களில் 75 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுப்பிரமணியன் பேசும்போது, “பெண்கள் வேலைக்கு சென்று முன்னேறினாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தனியாகவோ, கூட்டாகவோ பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை ஆண்கள் தங்களது கடமையாகக் கொள்ள வேண்டும்” என்றார். சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் எலிசபெத் பேசும்போது, “தலைமை பொறுப்புகளிலும், முடிவு எடுக்கும் நிலையிலும் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது” என்றார்.

கருத்தரங்கில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இசை துறைத் தலைவர் பிரதீபன் தட்சிணாமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் ரகுநாதன், டெல்லி ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் மற்றும் விஞ்ஞானி நீரஜ் ஜெயின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 11 பெண்களுக்கு ‘முன்னோடி பெண்மணி விருது‘ வழங்கி துணைவேந்தர் மணிசங்கர் பாராட்டினார்.

மேலும், மகளிரியல் துறை சார்பில் நடைபெற்ற பாலின சமத்துவ கலை விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வாண்டு பாலின கலைவிழா நிகழ்ச்சியில் அதிக பரிசுகளை பெற்று கலைவிழா சுழற்கோப்பையை மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரி பெற்றது. முன்னதாக மகளிரியல்துறை பேராசிரியை முருகேஸ்வரி வரவேற்றார். முடிவில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக உதவி பேராசிரியை திலகவதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்