டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களின் விடுமுறை ரத்து கர்நாடகத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி சுகாதாரத்துறை தகவல்

கர்நாடகத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-03-13 22:52 GMT
பெங்களூரு, 

கொரோனா வைரஸ் குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ்

சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தில் இதுவரை 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று புதிதாக 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்களில் 10 பேர் 28 நாட்களை நிறைவு செய்தனர். அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

14 நாட்கள் கண்காணிப்பு

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள 19 பேர் மருத்துவமனைகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் 3 பேர், ஹாசனில் 4 பேர், தட்சிண கன்னடாவில் 4 பேர், சிக்கமகளூருவில் ஒருவர், கலபுரகியில் 4 பேர், குடகில் ஒருவர், உடுப்பியில் 2 பேர்.

60 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட மாதிரிகளில் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து கர்நாடகம் வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

விடுமுறை ரத்து

சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இது அமலில் இருக்கும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்