மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குத்தாலம்,
காரைக்கால் கோட்டுச்சேரி பூக்காரத்தெருவை சேர்ந்த இளவரசன் (வயது 58). இவர், மயிலாடுதுறை அருகே நல்லாடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் திருவிளையாட்டத்தை சேர்ந்த நாராயணபிரசாத் என்பவர் 10-ம் வகுப்பு எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஓராண்டில் ஓய்வு பெற உள்ள நாராயணபிரசாத், பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரிடம் படிக்கும் மாணவ-மாணவிகளை, திருச்சி, முக்கொம்பு, கல்லணை போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நாராயண பிரசாத், சுற்றுலா வந்த 12 மாணவிகளிடமும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு மாணவியை, தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறிய ஆசிரியர் நாராயணபிரசாத், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இவரது பாலியல் தூண்டுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் நாராயணபிரசாத் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும், அறிவியல் ஆசிரியரான நாராயணபிரசாத், பாலியல் சில்மிஷம் குறித்து வெளியே சொன்னால் செய்முறை மதிப்பெண் போடமாட்டேன் என்று மாணவிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், தலைமை ஆசிரியர் இளவரசனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் நாராயணபிரசாத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.