தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் திடீர் சோதனை

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-13 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்றுமதி நிறுவனம் 

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்துக்கு நெல்லை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) இணை ஆணையர் பிஜூமேனன், சூப்பிரண்டு பின்னி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 10 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை வந்தனர். அவர்கள் திடீரென அந்த நிறுவனத்துக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

மதியம் வரை தொடர்ந்து சோதனை நடந்தது. அப்போது அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் விசாரணைக்காக நிறுவனத்தின் உரிமையாளரை நெல்லைக்கு அழைத்து சென்றனர்.

மோசடி

இதுகுறித்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கூறும்போது, ‘நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யாமல், போலி ஆவணம் மூலம் இறக்குமதி செய்ததாக ஜி.எஸ்.டி பெற்று மோசடி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த வாரம் நாகர்கோவிலில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து தூத்துக்குடியில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த மோசடி சங்கிலி தொடர் போன்று நடந்து உள்ளது. பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.

தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்