மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு மக்கள் பீதியடைய வேண்டாம் என முதல்-மந்திரி வேண்டுகோள்

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-13 00:25 GMT
மும்பை, 

உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்துக்குள்ளும் நுழைந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை மராட்டியத்தில் 10 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 8 பேர் புனே நாயுடு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் அமெரிக்காவில் இருந்து நாக்பூர் திரும்பிய 45 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல அமெரிக்காவில் இருந்து புனேக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புனே நாயுடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் புனேயில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது.

14 ஆக அதிகரிப்பு

இதேபோல் துபாயில் இருந்து மும்பை வந்த 65 வயது நபருக்கும், பிரான்சில் இருந்து தானே வந்த நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்து உள்ளார். மேலும் மாவட்டந்தோறும் கொரோனா வைரஸ் தடுப்பு மையங்களை அமைக்க முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மும்பையில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இடையே ஒருவித பீதி நிலவி வருகிறது.

மும்பை, தானே உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் பொது மக்கள் முக கவசங்களுடன் சென்றனர். மும்பையில் மின்சார ரெயில்களில் பயணிகள் முக கவசங்களுடன் செல்வதை காண முடிந்தது. இதேபோல வக்கீல்கள் யாருடனும் கைகுலுக்க வேண்டாம் என மும்பை பார் அசோசியேசன் வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்