விரும்பும் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் கொண்டு செல்ல அனுமதி - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
விரும்பும் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை புதுச்சேரி அரியூரில் உள்ள ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் கரும்புகளுடன் வந்து கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலம் அரியூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை கடந்த 5 ஆண்டுகளாக இயங்காத நிலையில் 2019-ம் ஆண்டு ஆலையை இயக்க இயலாது என புதுச்சேரி அரசுக்கு ஆலை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரி, தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற்று கரும்புகளை நெல்லிக்குப்பத்தில் உள்ள ஈ.ஐ.டி. பாரி ஆலைக்கு அரவைக்கு எடுத்துச்சென்றோம். இந்த ஆண்டு சோலைக்கழிவை ஒரு சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பிடித்தம் செய்கிறார்கள். இதனால் ஏக்கருக்கு 50 டன் கரும்பு அறுவடை செய்யும் விவசாயிக்கு சுமார் 3 டன் முதல் 5 டன் வரை இழப்பு ஏற்படுகிறது.
மேலும் நெல்லிக்குப்பம் விவசாயிகள் அரியூர் பகுதி கரும்பை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்துள்ளனர். எங்கள் கரும்புகளை திருட்டு கரும்பு எடுத்துச்செல்வதுபோல் நள்ளிரவில் எடுத்துச்செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சோலைக்கழிவு என்ற பெயரில் எடையில் பகல் கொள்ளையடிப்பது, கரும்பு எடுத்துச்செல்லும்போது நெல்லிக்குப்பம் பகுதி விவசாயிகளால் ஏற்படும் இடர்பாடுகளாலும் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகிறோம்.
இந்த சூழலில் கடந்த 9-ந் தேதி எங்களுக்கு எந்தவித அறிவிப்பும் இன்றி விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துறை முத்தரப்பு கூட்டம் என்ற பெயரில் ஈ.ஐ.டி. பாரி நெல்லிக்குப்பம் நிர்வாகத்தை மட்டும் அழைத்ததன்பேரில் நெல்லிக்குப்பம் ஆலை நிர்வாகம் தாங்களே புதுச்சேரி பகுதி விவசாயிகளை அழைத்து வந்து கூட்டத்தில் பங்கெடுக்க வைத்து நெல்லிக்குப்பம் ஆலைக்கு கரும்பு எடுத்துச்செல்ல அனுமதி அளித்துள்ளனர்.
கடந்த 5 மாதங்களாக எங்கள் பகுதியை பொது பகுதியாக பரிந்துரைக்க வேண்டும் என்று கடிதம் மூலமாகவும், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசியும் விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி ஆலைக்கு ஒரு சார்பாக செயல்பட்டுள்ளனர். எனவே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு அரியூர் ஆலையின் வரையறுக்கப்பட்ட தமிழக பகுதியை பொது பகுதியாக அறிவித்து விவசாயிகள் விரும்பும் ஆலைக்கு நடவு மற்றும் அறுவடை செய்ய ஆவன செய்து விவசாயிகளின் நலனை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.