கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் விமலா ஆய்வு செய்தார்.

Update: 2020-03-12 23:30 GMT
திருவாரூர்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விமான நிலையங்கள், துறைமுகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே வெளியில் அனுப்பப்படுகின்றனர்.

இந்தநிலையில் இந்தியா முழுவதும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் கண்காணிப்பு வார்டுகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு சுகாதாரத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் கண்காணிப்பு வார்டு செயல்பட்டு வருகிறது.

ஆய்வு

இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் விமலா, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா வார்டிற்கு சென்று தேவையான உபகரணங்கள், மருத்துவ வசதிகள் குறித்தும், டாக்டர்களிடம் கொரோனா தடுப்பு சிகிச்சை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்