வெள்ளோடு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை; சாவதற்கு முன்பு தாய்க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்

வெள்ளோடு அருகே தாய்க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு் தூக்குப்போட்டு் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-03-12 21:00 GMT
சென்னிமலை,

வெள்ளோடு அருகே உள்ள பெருந்துறை ஆர்.எஸ். ராஜாநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் பெருந்துறை சென்னிமலை ரோட்டில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், மேட்டுக்கடை அருகே உள்ள நஞ்சனாபுரத்தை சேர்ந்த பூங்கொடி என்பவரின் மகள் சத்யாவுக்கும் (26) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஷன்மிதா (4), நிதர்சனா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சத்யாவுக்கும், சதீஷ்குமாருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் சத்யா கோபித்துக்கொண்டு நஞ்சனாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன்பின்னர் சமாதானமாகி மீண்டும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜாநகர் வந்து கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.

நேற்று காலை சதீஷ்குமார் எழுந்து பார்த்தபோது சத்யா வீட்டில் தொட்டில் கட்டும் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தனது தாய் பூங்கொடிக்கு நேற்று காலை சத்யா செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். அதில், ‘எனது சாவுக்கு கணவர் தான் காரணம்’ என்று இருந்தது. உடனே அவர் பதறியடித்துக்கொண்டு ராஜாநகரில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தார்.

அங்கு மகளின் பிணத்தை பார்த்த அவர் கதறி அழுதார். பின்னர் பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பூங்கொடி வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்