பாமாயில் மரம் சாகுபடி மூலம் அதிக லாபம் பெறலாம்; கலெக்டர் ரத்னா தகவல்
பாமாயில் மரம் சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், நடுவலூர் கிராமத்தில் எண்ணெய் பனை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயி இன்னாசிமுத்து வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாமாயில் மர தோட்டத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய- மாநில அரசுகளின் பாமாயில் பண்ணை திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 80 ஹெக்டேர் அளவில் டெனிரா என்கிற ரக பாமாயில் மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாமாயில் மரமானது 30 ஆண்டுகளுக்கு நிரந்தர மாத வருமானம் தரக்கூடியது. 3 முதல் 5 ஆண்டுகளிலிருந்து அறுவடைக்கு தயாராகும். ஒரு ஹெக்டேர் பரப்பிற்கு 30 டன் வரை அறுவடை செய்யப்படுகிறது. பாமாயில் மரமானது மிதமான சாகுபடி செலவு, வேலையாட்கள் தேவை குறைவு, மழை, வெள்ளம், பூச்சிநோய் தாக்குதல் மிகவும் குறைவு. மேலும், அரசு நிர்ணயித்த விலையில் உத்தரவாத கொள்முதல் செய்யப்படுகிறது. மரம் நட்டதில் இருந்து முதல் 4 வருடத்திற்கு அரசு மானியம் பெறப்படுகிறது.
முதல் வருடம் கன்று மற்றும் பராமரிப்பு செலவிற்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.22 ஆயிரமும், இரண்டு மற்றும் மூன்றாம் வருடம் ஊடுபயிர் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ஆண்டிற்கு ரூ.10 ஆயிரமும், 4-ம் வருடம் பராமரிப்பு செலவிற்காக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி கிராமத்தில் உள்ள ஆலையில் விவசாயிகளிடம் பாமாயில் பழக்குலைகளை கொள்முதல் செய்து, பணப்பட்டுவாடா செய்து வருகிறது. பாமாயில் பயிர் செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். மேலும், தமிழக அரசு பாமாயில் பழக்குலைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அறிவித்து கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பாமாயில் மரம் பயிரிட்டு ஒருங்கிணைந்த கலப்பு பண்ணை அமைத்து பயன்பெறலாம். இவ்வாறு அவா் கூறினார். ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி, வேளாண்மை அலுவலர்கள் செல்வகுமார், சுப்ரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ரமேஷ்குமார், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.