காது கேட்காத குழந்தைகளுக்கு கருவி வழங்கும் நிகழ்ச்சி
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் காது கேட்காத குழந்தைகளுக்கு கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் காது கேளாமை குறைபாடு உடைய குழந்தைகளுக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து காதில் கருவி பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கருவி பொருத்தப்பட்ட குழந்தைகளுக்கு பேசும் பயிற்சியை டாக்டர் ஆஸ்லின் திவ்யா தலைமையில் டாக்டர்கள் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கருவியில் கோளாறு ஏற்பட்டதற்கு பதிலாக மாற்று கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி பங்கேற்று 4 குழந்தைகளுக்கு மாற்று கருவிகள் வழங்கினார். பின்னர் குழந்தைகள் பேசுவதை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், டாக்டர்கள் அருள் பிரகாஷ், பிஜூ, மதன்ராஜ், முத்தமிழ் சிலம்பு, சுனிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.