திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவி மர்மச்சாவு: ஆசிரியை அடித்ததால் இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் அருகே 1-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தார். ஆசிரியை அடித்ததால் இறந்ததாகக்கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மகள் பிரியதர்ஷினி (வயது 6) 1-ம் வகுப்பு படித்து வந்தாள். பச்சையப்பன், அவருடைய மனைவி இருவரும் கும்பகோணத்தில் தங்கியிருந்து பானிபூரிகடை நடத்தி வருகிறார்கள். இதனால் பிரியதர்ஷினி புளியம்பட்டியில் உள்ள அவருடைய தாத்தா கோவிந்தராஜ் வீட்டில் தங்கி படித்து வந்தாள். தினமும் புளியம்பட்டி கிராமத்தில் இருந்து வேன் மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பிரியதர்ஷினி மாலை 3 மணி அளவில் பள்ளியில் மயக்கம் போட்டு விழுந்ததாகக்கூறி ஆசிரியர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் தாத்தா கோவிந்தராஜ் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாணவியின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கெஜல்நாயக்கன்பட்டி தனியார் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து சிறுமி பிரியதர்ஷினியை ஆசிரியை அடித்ததால், மயங்கி விழுந்து இறந்ததாகவும், எனவே நிர்வாகம் மற்றும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, கந்திலி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, அங்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளி ஆய்வாளர் தாமோதரன் மற்றும் பள்ளி நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சிறுமியின் உறவினர்கள், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் புகாரை மனுவாக எழுதி கொடுங்கள், பிரேத பரிசோதனை வந்த பிறகு முழு விசாரணை நடத்தி அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மற்றும் மாணவ- மாணவிகளிடம் நடந்தவற்றை கேட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தார். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.