வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற தொழிலாளியை லத்தியால் தாக்கிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு இடமாற்றம்

வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற தொழிலாளியை போலீஸ் ஏட்டு லத்தியால் தாக்கினார்.

Update: 2020-03-11 21:30 GMT
திசையன்விளை, 

வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற தொழிலாளியை போலீஸ் ஏட்டு லத்தியால் தாக்கினார். இதுதொடர்பாக போலீஸ் ஏட்டு, பாளையங்கோட்டை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தொழிலாளி மீது தாக்குதல் 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குருகாபுரத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 57). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை அவரது மருமகன் பாலகிருஷ்ணனுடன் மொபட்டில் திசையன்விளைக்கு வந்து கொண்டிருந்தார்.

தபால் நிலையம் அருகே வந்தபோது அங்கு திசையன்விளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கணபதியின் வாகனத்தை நிறுத்த சொல்லி போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் ஏட்டு வினு, தான் வைத்திருந்த லத்தியால் கணபதியை தாக்கியுள்ளார். இதில் கணபதியின் மூக்கில் காயம் ஏற்பட்டது.

போலீஸ் ஏட்டு இடமாற்றம் 

அவர் உடனடியாக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் ஏட்டு வினு, பாளையங்கோட்டை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்படடார்.

மேலும் செய்திகள்