திசையன்விளை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 4 பவுனை திருடிய 3 பேர் சிறையில் அடைப்பு மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
திசையன்விளை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 4 பவுனை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திசையன்விளை,
திசையன்விளை கடையில் நகை வாங்குவது போல் நடித்து 4 பவுனை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 பவுன் நகை திருட்டு
நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருபவர் திருவடிமுத்து (வயது 65). கடந்த 5–ந் தேதி 2 பெண்கள், ஒரு ஆண் என 3 பேர் இவரது கடைக்கு வந்தனர். பின்னர் 2 பெண்களும் நகை வாங்குவது போல் நடித்து அங்கு பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த 4 பவுன் எடை கொண்ட கம்மல், மோதிரம் ஆகியவற்றை நைசாக திருடினர்.
பின்னர் அந்த நகைகளை ஆண் நபரிடம் கொடுத்தனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன் பின்பு திருவடிமுத்து நகைகளை சரிபார்த்தார். அப்போது பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த 4 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ கடைக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும், பஜார் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த 4 பவுன் நகைகளை திருடி, ஆண் நபரிடம் கொடுப்பதும், பின்னர் 3 பேரும் ஒரு மொபட்டில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. அந்த மொபட்டின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகரை சேர்ந்த சந்தானம் மனைவி லட்சுமி (60), சிவகாசி சாயல்பட்டி சக்திவேல் நகரை சேர்ந்த கருப்பசாமி (46), அவருடைய மனைவி பாண்டிஸ்வரி (41) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் லட்சுமி, கருப்பசாமியின் சித்தி ஆவார். உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
3 பேருக்கு வலைவீச்சு
மேலும் பின்னர் 3 பேரையும் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, லட்சுமி, பாண்டிஸ்வரி ஆகியோரை நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும், கருப்பசாமி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக ராஜபாளையம் அவுசிங் போர்டை சேர்ந்த கேசவன் (45), அவருடைய மனைவி கார்திகை பாண்டி அம்மாள், பரமக்குடியை சேர்ந்த ராஜபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.