தமிழ்நாட்டில் கள்ளநோட்டுகளை அச்சடித்து மும்பையில் புழக்கத்தில் விட்ட கும்பல் 2 பேர் கைது

தமிழ்நாட்டில் கள்ளநோட்டுகளை அச்சடித்து மும்பையில் புழக்கத்தில் விட்ட கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2020-03-10 23:11 GMT
மும்பை, 

வேலூர், மெயின் பஜார் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது43), அரிசி வியாபாரி. இவர் மீது மும்பை தாராவி அண்டாப்ஹில் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வீடு புகுந்து ரூ.5 லட்சம் திருடியதாக வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பாஸ்கர் அடிக்கடி மும்பைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி சயான் பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக அப்பகுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்தின்பேரில் கையில் பையுடன் நின்றுகொண்டிருந்த பாஸ்கரை பிடித்து விசாரித்தபோது, அவரிடம் கட்டுக்கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள்

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், கள்ளநோட்டுகளை தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் இருந்து எடுத்து வந்ததாக போலீசாரிடம் கூறினார். அதைத்தொடர்ந்து மும்பை தனிப்படையினர் பாஸ்கரை ஆம்பூருக்கு அழைத்துசென்றனர்.

பின்னர் ஆம்பூர் போலீசார் உதவியுடன் ஆம்பூர் அருகே உள்ள அய்யனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன்(42) என்பவரது வீட்டில் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது அங்கு கட்டுக்கட்டாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது. மேலும் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கும் பிரிண்டர், பேப்பர்கள் ஆகியவை இருந்தன.

இதனையடுத்து போலீசார் அங்கிருந்து 7 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் கள்ளநோட்டுகளையும், பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பாஸ்கர் மற்றும் சரவணனை கைது செய்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மும்பைக்கு அழைத்து வந்தனர்.

வேலூர் ஜெயிலில் உருவான திட்டம்

கள்ளநோட்டு வழக்கில் கைதான பாஸ்கர் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, மும்பையை சேர்ந்த இப்ராஹிம், திருவண்ணாமலையை சேர்ந்த முருகன் ஆகியோருடன்பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் சிறிய தவறு செய்துவிட்டு ஜெயிலுக்கு வரக்கூடாது, பெரியதாக சம்பவம் செய்துவிட்டு சிறைக்கு வரவேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று தோன்றியபோது கள்ளநோட்டுகளை தயார் செய்து புழக்கத்தில் விடலாம் என்று முடிவு செய்தனர்.

அதன்படி, சரவணன் வீட்டில் கள்ளநோட்டுகளை தயார் செய்து, அதனை பாஸ்கர் மும்பைக்கு எடுத்து வந்து இப்ராஹிம் மூலம் மும்பையில் புழக்கத்தில் விட்டு இருப்பது தெரியவந்தது.

ஆட்டோ டிரைவராக...

சரவணன் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.200, ரூ.500 கள்ளநோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து தமிழகம், மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. கோடிக்கணக்கில் இவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் எனவும், கள்ளநோட்டுகளை மாற்ற ஒரு கும்பல் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு இருப்பதும், மும்பையில் தலைமறைவாகி உள்ள இப்ராஹிம் மற்றும் தொடர்புடைய நபர்களை பிடித்தால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

கைதான சரவணன் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஆட்டோ டிரைவர் வேலை பார்ப்பது போல் ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்