நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் நிழல் மந்திரி சபை ராஜ் தாக்கரே மகன் சுற்றுலா மந்திரி
நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் நிழல் மந்திரி சபை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ராஜ் தாக்கரேயின் மகன் அமித்துக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டது.
மும்பை,
நவநிர்மாண் கட்சியின் 14-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று முன்தினம் நவிமும்பை வாஷியில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவனர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.
இந்த விழாவில் நூதன முடிவு எடுக்கப்பட்டது. அதாவது மாநில மந்திரி சபையை போல நவநிர்மாண் சேனா சார்பில் நிழல் மந்திரி சபை அமைக்கப்பட்டது. இந்த மந்திரி சபையில் ராஜ் தாக்கரேயின் மகன் அமித்துக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் கொள்கையில் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி அரசில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே சுற்றுலா துறையை வகித்து வருகிறார். அவருக்கு போட்டியாக ராஜ் தாக்கரே மகன் அமித் நிழல் சுற்றுலா துறை மந்திரியாகி உள்ளார். இதேபோல ஒவ்வொரு துறைக்கும் நிழல் மந்திரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கத்தில் நவநிர்மாண் சேனா இந்த புது முயற்சியில் இறங்கி உள்ளது.
அரசியல் எதிரிகள்
இங்கிலாந்து நாட்டில் எதிர்க்கட்சி சார்பில் நிழல் மந்திரி சபை அமைக்கப்படுவது வழக்கம். இந்த நிழல் மந்திரி சபையில் இடம்பெறுவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் மந்திரிகளுக்கு கேள்வி எழுப்பி சவாலாக விளங்குவார்கள். அதே பாணியில் ராஜ்தாக்கரே கட்சி மராட்டியத்தில் நிழல் மந்திரி சபையை அமைத்து உள்ளது.
ஒன்றுவிட்ட சகோதரர்களான உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் மராட்டியத்தில் அரசியல் எதிரிகள் ஆவர். உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2006-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ்தாக்கரே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.