கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2020-03-10 23:15 GMT
ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு அதிகபடியாக வினாடிக்கு 801 கனஅடி வந்து சேர்ந்தது. கண்டலேறு அணை முழு கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது அணையில் 30 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை

கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டது. 4 நாட்களுக்கு முன்னர் வெறும் 120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் கடந்த 4-ந் தேதி ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை அளித்தனர். இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவதாக ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி உறுதி அளித்தார்.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

அதன்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு முன்னர் தண்ணீர் வரத்து வினாடிக்கு 153 கனஅடியாகவும், நேற்று முன்தினம் வினாடிக்கு 250 கனஅடியாகவும், நேற்று காலை வினாடிக்கு 383 கனஅடியாகவும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் நேற்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6.233 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 28.38 அடியாக பதிவானது. 1,392 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 313 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்