மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 6 ஆண்டு சிறை - கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

Update: 2020-03-10 22:15 GMT
கடலூர்,

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 63). இவர் கடந்த 3.7.2018 அன்று அதே பகுதியை சேர்ந்த 16 வயது மனநலம் பாதித்தவரும், மாற்றுத்திறனாளியுமான சிறுமியின் வீட்டுக்கு சென்றார். அங்கே அவரது பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட்டனர். அந்த சிறுமியுடன் 2 தம்பிகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

இதை பார்த்த அன்பழகன், மாற்றுத்திறனாளி சிறுமியின் தம்பிகளிடம் உங்களுடைய அக்காவுக்கு வைத்தியம் பார்க்க போகிறேன். நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அன்பழகன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

சத்தம் கேட்டதும் சிறுமியின் தம்பிகள் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி கருணாநிதி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் அன்பழகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்