10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மண்டல அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி தலைமை தாங்கினார். தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி, சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலாளர் மனோகரன், ஐ.என்.டி.யு.சி. செயல் தலைவர் ரகுராமன், பொதுச்செயலாளர் முருகானந்தம், அறிவர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் அறிவழகன், பொதுச்செயலாளர் கணேசன், டி.டி.எஸ்.எப். சங்க தலைவர் துரைராஜ், பொதுச்செயலாளர் லோகநாதன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினர்.
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடித்து 1.9.2019 முதல் வழங்க வேண்டிய புதிய சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்க வேண்டும், போக்குவரத்துக்கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான வித்தியாச தொகையை அரசே வழங்க வேண்டும், தற்போது பெறும் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீத ஊதிய உயர்வு தர வேண்டும், நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. பொருளாளர் ஜான்போஸ்கோ நன்றி கூறினார்.