சிவாடியில் பெட்ரோலிய கிடங்கு அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம்

சிவாடியில் பெட்ரோலிய கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-10 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் சிவாடி கிராமத்தில் பெட்ரோலிய கிடங்கு அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

இதில் சங்க மாநில துணைத்தலைவர்கள் ரவீந்திரன், டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட நிர்வாகிகள் இளம்பரிதி, மல்லையன், அர்ச்சுனன், ஒன்றிய செயலாளர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது, பெட்ரோலிய கிடங்கு அமைக்க சிவாடி கிராமத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மாற்று இடத்தில் பெட்ரோலிய கிடங்கை அமைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

60 பேர் கைது

இந்த போராட்டத்தின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 8 வழிசாலை, உயர்மின்கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்களை பறிப்பது அதிகரித்து உள்ளது. பெட்ரோலிய கிடங்கு அமைக்க சிவாடி கிராமத்தில் சிறு, குறு விவசாயிகளிடம் உள்ள சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மாற்று இடத்தில் பெட்ரோலிய கிடங்கு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை காத்திருக்கும் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள், சிவாடி கிராம மக்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி வரை தொடர்ந்து போராட்டம் நடந்தது. அங்கு வந்த தர்மபுரி டவுன் போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், துணைத்தலைவர்கள் ரவீந்திரன், டில்லிபாபு உள்பட 60 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்