விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 14 சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
14 காலி இடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 14 சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 700 சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு தகுதியானவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
தகுதிகள்
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். சமையல் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த தகுதிகள் உள்ளவர்கள் விண்ணப்பத்தை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 26–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.