திட்டக்குடி அருகே, வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
திட்டக்குடி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாயில் வெலிங்டன் ஏரி உள்ளது. இதன் முழு கொள்ளளவு 2 ஆயிரத்து 580 மில்லியன் கனஅடி ஆகும். நீர்மட்ட உயரம் 29.72 அடி. இந்த ஏரியின் மூலம் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியில் தற்போது 15.40 அடி தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் திட்டக்குடி பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இதனால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கலந்து கொண்டு வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து பாசன வாய்க்காலில் மலர் தூவினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திட்டக்குடி வட்டம் வெலிங்டன் ஏரியில் வினாடிக்கு 250 கன அடி வீதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 19 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும். இதன்மூலம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களில் 63 கிராமங்களில் உள்ள 23 ஏரிகள் மற்றும் நேரடி பாசனம் மூலமாக 24 ஆயிரத்து 59 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதன் கீழ்மட்டகால்வாய் மூலம் 13 கி.மீ. தூரத்திற்கு 9 ஆயிரத்து 209 ஏக்கர் நிலமும் மேல்மட்ட கால்வாய் மூலம் 39 கி.மீ தூரத்திற்கு 14 ஆயிரத்து 850 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.
ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 29.72 அடி. இதில் தற்சமயம் 15.40 அடி தண்ணீர் உள்ளது. மேலும் ஏரியின் மொத்த கொள்ளளவான 2,580 மில்லியன் கன அடியில் தற்சமயம் 526.99 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. எனவே திறந்து விடப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், விருத்தாசலம் செயற்பொறியாளர் மணிமோகன், உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு. உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், சோழராஜன், விவசாய சங்க தலைவர்கள் கொத்தட்டை ஆறுமுகம்பிள்ளை, மருதாசலம், வேணுகோபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, இடைச்செருவாய் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வாகை இளங்கோவன், சிறுமுளை கூட்டுறவு வங்கி தலைவர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெலிங்டன் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.