4 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது ஏரியில் இளம்பெண் பிணமாக மிதந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பம் இன்னொரு கொலை வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் ‘பகீர்’ தகவல்
பெரும்பாக்கம் ஏரியில் 4 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் பிணமாக மிதந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி போலீசாரிடம் இன்னொரு கொலை வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர், ‘பகீர்’ தகவலை தெரிவித்து உள்ளார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நேசமணி நகர் ஏரியில் 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பள்ளிக்கரணை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏரியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் கருதினர்.
பெரும்பாக்கம் ஏரியில் இதுபோல் தொடர்ந்து உடல்கள் மிதப்பதால் இதுபற்றி விசாரிக்கும்படி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சவுரிநாதன் மேற்பார்வையில் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
லிப்ட் ஆபரேட்டர்
அப்போது இரவு நேரத்தில் ஒரு ஆட்டோ ஏரிக்கரை அருகே சென்றதும், அதில் கொலையான வாலிபர் உள்பட 3 பேர் இருந்ததும் தெரிந்தது. அந்த ஆட்டோ பதிவு எண்ணை வைத்து ஆட்டோ டிரைவரான மேடவாக்கம் ராமைய்யா நகரைச் சேர்ந்த சேவியர் அருள்(45) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் ஏரியில் பிணமாக கிடந்தவர் சித்தாலபாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஹென்றி ஜெயசிங்(வயது 33), ‘லிப்ட்’ ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார் என்பது தெரிந்தது.
இதுபற்றி போலீசாரிடம் சேவியர் அருள் கூறியதாவது:-
சங்கிலிக்காக கொலை
கடந்த 7-ந்தேதி இரவு ஹென்றி ஜெயசிங், வேங்கைவாசல் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினார். நானும் பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பை சேர்ந்த அமுல்ராஜ் என்ற விஷ்ணு (33) என்பவருடன் அங்கு மது அருந்தி கொண்டு இருந்தேன். ஹென்றி ஜெயசிங் கழுத்தில் தங்க சங்கிலி இருந்ததை கண்டதும் அதை பறிக்க திட்டமிட்டோம்.
ஹென்றியை ஏரிக்கரைக்கு சென்று மது அருந்தலாம் வா என்று அழைத்து வந்தோம். ஏரிக்கரையில் நாங்கள் மது அருந்தும்போது ஹென்றியிடம் சங்கிலி பற்றி பேசினோம். உடனே சுதாரித்த ஹென்றி, அங்கிருந்து செல்ல முயன்றார்.
உடனே அங்கிருந்த உருட்டுக்கட்டையால் ஹென்றியை தாக்கினோம். அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு அவரை ஏரிக்குள் தள்ளி நீரில் அமுக்கினோம். இதில் அவர் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் சேவியர் அருள் மற்றும் பெரும்பாக்கத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான அமுல்ராஜ் என்ற விஷ்ணு இருவரையும் கைது செய்தனர். மேலும் ஏரியில் தவறி விழுந்து பலியான வழக்கை கொலை வழக்காக பள்ளிக்கரணை போலீசார் மாற்றி விசாரித்தனர்.
திடுக்கிடும் தகவல்
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் சேவியர் அருளிடம் மேலும் விசாரிக்கும்போது, மற்றொரு திடுக்கிடும் தகவலையும் தெரிவித்தார்.
அதாவது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி பெரும்பாக்கம் ஏரியில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் பெண்ணா?. திருநங்கையா? என்ற சந்தேகத்தில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வந்தனர். அதில் இறந்து கிடந்தவர் பெண்தான் எனவும், அவரை தனது மகனுடன் சேர்ந்து கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.
இதுபற்றி போலீசாரிடம் சேவியர் அருள் கூறியதாவது:-
காதலுக்கு எதிர்ப்பு
பள்ளிக்கரணையில் உள்ள ஒரு துணிக்கடையில் எனது மகளுடன் திருவண்ணாமலையை சேர்ந்த ஆதரவற்ற 19 வயது பெண் சபானா வேலை செய்து வந்தார். அடிக்கடி அவர் எனது மகளுடன் எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் அவருக்கும் எனது மகன் மைக்கேல் விஜய் (20) இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இதை அறிந்த நான், எனது மகனை கண்டித்தேன். அவர்களின் காதலை ஏற்க மறுத்தேன். அதற்கு எனது மகன் சபானா 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். நான் கருவை கலைக்க சொன்னேன். ஆனால் 4 மாதங்கள் ஆனதால் கருவை கலைக்க டாக்டர்கள் மறுத்துவிட்டதாக தெரிவித்தான்.
கழுத்தை இறுக்கி கொலை
இதையடுத்து அந்த பெண்ணை பெரும்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்து வர சொன்னேன். அதன்படி சம்பவத்தன்று இரவு சபானாவை ஏரிக்கரைக்கு அழைத்து வந்தான். உடனே நான் நைலான் கயிற்றால் சபானாவின் கழுத்தை இறுக்கினேன். அவர் மயங்கி விழுந்ததும் மகனுடன் சேர்ந்து அவரது கை, கால்களை கட்டி பெரும்பாக்கம் ஏரியில் தூக்கிப்போட்டு விட்டு வந்தோம்.
மேலும் அவர் பெண் என்பது தெரியக்கூடாது என்பதற்காக கையை விட்டு பெண்ணின் கர்ப்ப பையை பிடுங்கி ஏறிந்தேன்.
இவ்வாறு அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சந்தேக மரணம் என்று இருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி இந்த வழக்கிலும் சேவியர் அருள், அவரது மகன் மைக்கேல் விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் கமிஷனர் பாராட்டு
பெரும்பாக்கம் ஏரிக்கரையில் கிடந்த 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனையில் கூட கொலை என தெரியாத வகையில் இருந்த 2 வழக்குகளையும் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் பாராட்டினார்கள்.
இந்த கொலை சம்பவம் பெரும்பாக்கம், மேடவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேவியர் அருள், சோழிங்கநல்லூர் பகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாகியாக இருப்பதாக கூறப்படுகிறது.