கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வந்து தங்குபவர்களை கண்காணிக்க வேண்டும்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்குபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு கலெக்டர் ‌ஷில்பா அறிவுறுத்தினார்.

Update: 2020-03-09 23:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸ் சீனாவின் வூகான் நகரத்தில் இருந்து பரவியுள்ளது. இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் சோர்வு உள்ளவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ்

இந்த தொற்று கண்டவர்கள் தினமும் கைகளை சோப்பு போட்டு 10 முறை கழுவ வேண்டும். ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தங்கும் அறை படிச்சுவர், கைப்பிடி, ஜன்னல், கதவு ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

தனி கவனம்

வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தால் தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். இருமல், சளி, ஜலதோசம் உள்ளவர்கள் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், சுகாதார பணிகளின் துணை இயக்குனர் வரதராஜன், நெல்லை மாநகர் நல அலுவலர் சதீ‌‌ஷ்குமார், உணவு நியமன அலுவலர் ஜெகதீ‌‌ஷ் மற்றும் ஓட்டல், தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

நோய் தடுப்பு மருந்து

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்