கோவை- பெங்களூரு இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை பெண்களே இயக்கி சாதனை

கோவை - பெங்களூரு இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை பெண்களே இயக்கி சாதனை படைத்தனர்.

Update: 2020-03-08 22:30 GMT
கோவை,

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் காலை 5.45 மணிக்கு உதய் என்ற இரட்டை அடுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பிற்பகல் 12.45 மணிக்கு பெங்களூரு சென்றடை யும். இதில் 5 இரட்டை அடுக்கு ஏசி பெட்டிகள், 5 சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

கோவையை சேர்ந்த தொழில் துறையினர், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மற்றும் பலருக்கு இந்த ரெயிலை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் உலக மகளிர் தினத்தை யொட்டி, உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை பெண்களே இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயிலில் என்ஜின் டிரைவர், டிக்கெட் பரிசோதகர், ரெயில் காவலர் என்று அனைத்து பணிக்கும் பெண்களே நியமிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் திறம்பட இந்த ரெயிலை இயக்கி சாதனை படைத்தனர்.

கோவையில் இருந்து ரெயிலை பெண் என்ஜின் டிரைவர் இயக்கிய போது அங்கு கூடி நின்றவர்கள் கைத் தட்டி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அந்த ரெயில் சேலம் சென்றடைந்த போது மகளிர் குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர்.

இதில் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு ரெயிலை இயக்கிய பெண்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். பிறகு அங்கிருந்து புறப்பட்ட ரெயில் பிற்பகல் 12.45 மணியளவில் பெங்களூரு சென்றடைந்தது. இந்த ரெயிலில் பயணித்த பயணிகளும், ரெயிலை இயக்கிய பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறிய தாவது:-

சேலம் ரெயில்வே கோட்டத்தில் 74 ரெயில் என்ஜின் டிரைவர்கள், 4 ரெயில் நிலைய மேலாளர்கள், பொறியியல் துறையில் 294 பேர், மெக் கானிக் பிரிவில் 125 பேர், முன்பதிவு மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் 153 பேர் உள்பட மொத்தம் 1,131 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.

உலக மகளிர் தினத்தையொட்டி சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் கடந்த 1-ந் தேதி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை மகளிர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், ரெயில்வேயில் பணியாற்றி வரும் பெண் சாதனை யாளர்களை வெளியே கொண்டு வகையில் மகளிர் குழுவினரால் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது.

இந்த ரெயிலில் என்ஜின் டிரைவராக நிம்மி, உதவி டிரைவராக பி.ஜே.சிந்து, ரெயில் காவலர் எஸ்.மரீனா, முதன்மை டிக்கெட் ஆய்வா ளர்கள் மைதிலி, பி.ஆர்.சாவித்ரி, பயணச்சீட்டு சோதனையாளர்கள் தன்யா, ஹெலன், ஆர்.நந்தினி ஆகிய 8 பேர் பணியாற்றினார்கள். அவர்கள் அனைவரும் ரெயிலை திறம்பட இயக்கி சாதனை படைத்து ரெயில்வே துறைக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்