கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் கோவில் பவுர்ணமி விழா: ஆடு- கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
கெஜஹட்டியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவில் பவுர்ணமி விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு மற்றும் கோழி பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பவானிசாகர்,
பவானிசாகர் வனப்பகுதி தெங்குமரஹடா செல்லும் வழியில் உள்ளது கெஜஹட்டி. இங்கு பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர், பொம்ம தேவியார் கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்தக் கோவில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வசிக்கும் உப்பிலி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் பவுர்ணமி அன்று இந்த 3 மாநிலங்களில் உள்ள உப்பிலிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் வாகனங்களில் இந்த கோவிலுக்கு வந்து ஆடு மற்றும் கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் இரவு கோவில் வளாகத்திலேயே தங்கி வழிபாடு செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். கடந்த ஆண்டை விட பக்தர்கள் வருகை இந்த ஆண்டு அதிகமாக இருந்ததாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் மருத்துவ வசதி மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி உப்பிலி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவில் வளாக பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், குழந்தைகளுக்கு இலவசமாக பாலும் வழங்கப்பட்டது.
இதையொட்டி பவானிசாகர் வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறையினரும், பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசாரும் பவானிசாகரை அடுத்த காராச்சிகொரை முதல் கோவில் வளாகம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.