வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
வடசென்னை அனல் மின்நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 பிரிவில் தலா 210 வீதம் 630 மெகாவாட்களும், 2-வது யூனிட்டில் உள்ள இரு பிரிவுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்களும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டு, அங்கிருந்து கன்வேயர் பெல்ட் மூலம் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், துகள்களாக மாற்றப்பட்டு கொதிகலன்கள் மூலம் எரியூட்டப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கன்வேயர் பெல்ட்டில் முதல் யூனிட் முதல் பிரிவிற்கு நிலக்கரி கொண்டு வரும்போது, சேமிப்பு கிடங்கு அருகே திடீரென தீப்பிடித்து மள மளவென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், அனல்மின் நிலைய தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் நிலக்கரி தீப்பிடித்து எரிய தொடங்கியதால், கரும்புகை வர ஆரம்பித்தது. இதையடுத்து, எண்ணூர் காமராஜர் துறைமுகம், வல்லூர் அனல்மின் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதனையடுத்து கன்வேயர் பெல்ட் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வடசென்னை அனல்மின் நிலைய பொறியாளர்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து நிலக்கரி கையாளும் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.