மைசூருவில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் மான் கொம்புகளை கடத்த முயற்சி தமிழக பயணி கைது
மைசூரு விமானத்தில் மான் கொம்புகளை கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
மைசூரு.
மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் மான் கொம்புகள் கடத்தி செல்லப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பையில் மான்கொம்புகள் இருந்தன. இதனால் அந்த பயணியை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் விசாரித்தனர்.
தமிழக பயணி கைது
அப்போது அவர் தமிழ்நாடு காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த கார்த்திக்(வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் மான் கொம்புகள் கிடைத்தது எப்படி என்று அவரிடம், அதிகாரிகள் மேற்கொண்டு விசாரித்தனர். அப்போது கார்த்திக் நான் ஊட்டியில் இருந்து மைசூருவுக்கு காரில் வரும் போது பந்திப்பூர் வனப்பகுதி சாலையில் மான்கொம்புகள் கிடந்தன. அந்த மான் கொம்புகளை நான் எடுத்து வந்தேன் என்று கூறினார்.
ஆனாலும் அவரிடம் இருந்த மான்கொம்புகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் கார்த்திகை விமான நிலைய அதிகாரிகள், வித்யரண்யபுரா போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மான் கொம்புகளை கடத்த முயன்றதாக கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.