சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்; 100-க்கும் மேற்பட்ட கடை, வீடுகளின் சுவர்கள் இடிப்பு
விருதம்பட்டு பகுதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடை, வீடுகளின் சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன.
காட்பாடி,
வேலூர் மாநகர பகுதிகளில் நாளுக்கு, நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இதற்கு சாலையோர ஆக்கிரமிப்பு மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்றும், இவற்றை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஒட்டிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய, மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் மாநகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக வேலூர் ரங்காபுரம் முதல் கொணவட்டம் வரை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையோர ஆக்கிரமிப்புகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் விருதம்பட்டு பகுதியில் காட்பாடி-சித்தூர் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று நடந்தது. புதிய பாலாற்று மேம்பாலத்தின் அருகே இருந்து சித்தூர் நோக்கி செல்லும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளின் முன்பகுதி கூரைகள், சுவர்கள் மற்றும் வீடுகளின் சுற்றுச்சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
இந்த பணியை வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், கோட்ட பொறியாளர் சரணவன், உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, உதவிபொறியாளர் ஞானபிரகாசம், 4-வது மண்டல உதவிகமிஷனர் செந்தில்குமார், தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
கடைகளின் கூரை, சுற்றுச்சுவரை அகற்ற சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடை, வீடுகளின் சுவர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் மேற்பார்வையில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்காக அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.