செங்கோட்டையில் 50 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் நடவடிக்கை

செங்கோட்டையில் வரி பாக்கி செலுத்தாத 50 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Update: 2020-03-07 22:00 GMT
செங்கோட்டை, 

செங்கோட்டையில் வரி பாக்கி செலுத்தாத 50 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வரி பாக்கி 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி, கடைகள் வாடகை பாக்கி, ஏலம், குத்தகை பாக்கி உள்பட நிலுவையில் உள்ள பணத்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து வருகிறது.

இருந்த போதிலும் நீண்ட நாட்களாக வரி பாக்கி வைத்து இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு 

அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கண்ணன் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் லட்சுமணன், குடிநீர் பொருத்துனர் ஜின்னா, உதவி வருவாய் ஆய்வாளர்கள் நாகூர்மீராப்பிள்ளை, அண்ணாவி, பாண்டியன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளுக்கு நேரடியாக சென்று செங்கோட்டை நகராட்சி பகுதியில் 24 வார்டுகளில் உள்ள வீடுகளில் வரி பாக்கி செலுத்தாதவர்களை கண்டறிந்து தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனர். இதையடுத்து வரி பாக்கி செலுத்தாத 50 வீடுகளில் உடனடியாக குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.

இதுதொடர்பாக ஆணையாளர் கண்ணன் கூறுகையில், “நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை நீண்டநாட்களாக அதிகப்படியாக யார் வைத்துள்ளார்கள் என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறோம். ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் மூழ்கி உள்ளதால் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோடை காலம் வந்து விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்படும். இந்தநிலையிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக வழங்கி வருகிறோம். எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.

மேலும் செய்திகள்