சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் பயங்கர மோதல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதி கொண்டனர். இதைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2020-03-06 23:56 GMT
சென்னை, 

சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி ஆங்காங்கே மோதிக்கொள்வது அன்றாட வழக்கமான காட்சியாகும். பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மற்றும் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் இதுபோல அடிக்கடி மோதிக்கொள்வார்கள். ‘ரூட் தல’ பிரச்சினையால் இது போன்ற மோதல் சம்பவங்கள் அதிகமாக நடந்தன. இதையொட்டி போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் மாணவர்களின் மோதல் சம்பவம் சற்று குறைந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மாநிலக் கல்லூரி மாணவர்களும் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறியது.

கத்திக்குத்து

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் நேரு (வயது 20). மாநிலக் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர். இவர் நேற்று கல்லூரி முடிந்தவுடன் தனது நண்பர் பாலசந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் வரும்போது அங்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏராளமான பேர் திரண்டு நின்றனர்.

அவர்கள் மாணவர் நேரு வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தார்கள். நேரு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். முதலில் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர் நேருவை சரமாரியாக தாக்கினார்கள். அவரை ஓட ஓட விரட்டி தலையில் பட்டா கத்தியால் வெட்டினார்கள்.

அவருக்கு கத்திக்குத்தும் விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட மாணவர் நேரு தப்பி ஓடினார். அவருடைய நண்பர் பாலசந்திரனும் தப்பி ஓடினார்.

போர்க்களம்

இந்த சம்பவத்தால் நெல்சன் மாணிக்கம் சாலையே சிறிது நேரம் போர்க்களம்போல காணப்பட்டது. நடுரோட்டில் சம்பவம் நடந்ததால் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினார்கள். தாக்குதலை நடத்திவிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த மாணவர் நேரு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டது.

கத்தியுடன் மாணவர் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டதாக பச்சையப்பன் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் கார்த்திக் (20) என்ற மாணவரை போலீசார் கத்தியுடன் கைது செய்தனர்.

தப்பியோடிய மேலும் சில பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இதுபோன்ற மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்