மும்பையில் கள்ளநோட்டுகள் அச்சடித்த 2 பேர் கைது டி.வி. நடிகருடன் தொடர்பு குறித்து விசாரணை

கள்ளநோட்டுகள் அச்சடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-03-06 22:00 GMT
மும்பை, 

மும்பை அந்தேரி வீராதேசாய் ரோடு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, காரில் இருந்தவர்கள் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் காரில் ஏறி சோதனை போட்டனர். இந்த சோதனையில் காரில் கட்டுக்கட்டாக ரூ.500 கள்ளநோட்டு பண்டல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஜயன்(வயது28), டோன் வார்கி(26) என்பதும், நவிமும்பை உல்வே பகுதியில் உள்ள வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சிட்டு, புழக்கத்தில் விட காரில் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நவிமும்பை உல்வே பகுதியில் அவர்கள் தங்கி இருந்த வீட்டிலும் சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், அங்கிருந்த கள்ளநோட்டுகள் தயாரிக்கும் எந்திரம், மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றதாக டி.வி. நடிகர் சூரிய சசிகுமார் மற்றும் அவரது தாய், சகோதரி ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவருக்கும், அவர்களுக்கும் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்