விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சியை அடுத்த தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 40), விவசாயி. இவருடைய தந்தை ராசுவின் பெயரில் அதே கிராமத்தில் 1½ ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொட்டியம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த முகமதுஅலி என்பவரை அணுகினார். அதற்கு பட்டா மாற்றம் செய்து தர வேண்டுமெனில் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று முகமதுஅலி கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குமார், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார்.
அதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்றம் செய்து தர முடியும் என்று முகமதுஅலி கறாராக கூறினார். இதுபற்றி குமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 11.8.2011 அன்று ரசாயன பொடி தடவிய பணத்தை குமார் எடுத்துச்சென்று முகமதுஅலியிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் முகமதுஅலியிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றை போலீசார் கைப்பற்றி, இதுதொடர்பாக விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே முகமதுஅலி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், குற்றம் சாட்டப்பட்ட முகமதுஅலிக்கு (62) 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.