நல்லம்பள்ளி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் தர்ணா

நல்லம்பள்ளி அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-05 23:30 GMT
நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சியில் ஆவரங்காட்டூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மிட்டாரெட்டிஅள்ளி இணைப்பு சாலையில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவு வரை சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து சாலையை சீரமைக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

ஆனால் சாலை அமைக்கும் பணி தொடங்கி பல நாட்கள் ஆகியும் இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. மேலும் சாலை அமைக்க கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களும் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருவோர் பழுதடைந்த சாலையில் செல்லும்போது தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி காயம் அடையும் சூழ்நிலை உள்ளது. மேலும் பழுதடைந்த சாலையால் ஆவரங்காட்டூர் கிராமத்திற்கு அரசு பஸ் செல்லாமல் வேறு வழியே சென்று விடுகிறது.

தர்ணா

இதனால் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 6 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று வருகின்றனர். இந்தநிலையில் பழுதடைந்த சாலையை விரைவாக சீரமைத்து தர கோரி நேற்று ஆவரங்காட்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைத்து தர வில்லை என்றால் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் வராததால் பொதுமக்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த தர்ணாவால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்